#IPL2021 எஞ்சிய போட்டிகள் எந்த நாட்டில் நடத்தப்படும்..? பிசிசிஐ பார்வையில் 3 நாடுகள்

By karthikeyan VFirst Published May 6, 2021, 2:34 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் எந்த நாட்டில் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. இதையடுத்து ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு திரும்பிவருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் 8 பேர் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை சேர்ந்த வீரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் விரைவில் கிளம்பிவிடுவார்கள்.

ஒரு சீசனில் மொத்தம் 60 போட்டிகள். 56 லீக் போட்டிகள். 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

எஞ்சிய போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படாது. கடந்த சீசனை போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் திட்டம் பிசிசிஐயிடம் உள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அமீரகத்தில் வெயில் பட்டைய கிளப்பும் என்பதால், சீதோஷ்ண நிலையை கருத்தில்கொண்டு இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானிலை, பிராட்ஸ்கேஸ்ட்டர்ஸுக்கு சாதகமான வகையில் ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
 

click me!