யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது ஹாட்ரிக் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இடம் பெற்ற 5 அணிகள், 2 போட்டிகள் வீதம் மொத்தமாக 8 போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் நேற்று வரை நடந்த 7 போட்டிகளின் படி டெல்லி கேபிடல்ஸ் 3 போட்டிகளில் 2ல் வெற்றி 1ல் தோல்வியோடு நெட்ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 போட்டிகளில் 2ல் வெற்றி 1ல் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் நம்பர் 2 இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3ஆவது இடத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் தான் 8 ஆவது லீக் போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி நிதானமாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய யுபி வாரியர்ஸ் அணிக்கு அலீசா ஹீலி, கிரன் நவ்கிரே இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் நவ்கிரே 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சமரி அதபத்து 17 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த ஸ்வேதா ஷெராவத் 2 ரன்களில் நடையை கட்டினார்.
கடைசியாக வந்த தீப்தி சர்மா 17 ரன்கள் எடுக்க, அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் 33 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக யுபி வாரியர்ஸ் அணியானது 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது தொடர்ந்து 3ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. குஜராத் அணிக்கு இன்னும் 5 போட்டிகள் இருக்கும் நிலையில் 5 போட்டியிலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.