சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சந்தித்து பேசியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், முதல் இன்னிங்ஸில் விதர்பா 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜார்க்கண்ட் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், விதர்பா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் துருவ் ஷோரே மற்றும் அதர்வா தைடே இருவரும் சதம் அடிக்க, விதர்பா 374 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக ஜார்க்கண்ட் அணிக்கு 429 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 429 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஜார்க்கண்ட் அணி விளையாடியது. இதில், அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
விதர்பா அணி சார்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நிலையில் தான் ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனியை சந்தித்து பேசியுள்ளார். வரும் மார்ச் 22 ஆம் தேதி 17ஆவது சீசனுக்காக ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள உமேஷ் யாதவ் ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியை நேரில் சென்று பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டா பதிவில் பதிவிட்டுள்ள உமேஷ் யாதவ் தோனி பற்றி ராஜாவைப் போன்று வந்தார். லெஜெண்ட் போன்று வாழ்ந்தார். தற்போது ஜெண்டில்மேன் என்று நினைவுபடுத்தப்படுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.