ஒருநாள் கிரிக்கெட் ஆசிய கோப்பை தொடரைத் தொடர்ந்து நடக்க இருக்கும் டி20 ஆசிய கோப்பை தொடருக்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நாளை இந்தோனேஷியாவில் கூடுகிறது.
ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) எனப்படும் ஆசிய கோப்பை தொடரானது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கு இடையில் இந்த தொடர் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து அடுத்து டி20 ஆசிய கோப்பை தொடர் நடக்க இருக்கிறது.
இதற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது. இந்தோனேஷியாவின் பாலி பகுதியில் இந்த கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட கான்டினென்டல் அசோசியேஷன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் ஒளிபரப்பு உரிமைகள், நடக்கும் இடங்கள், நடத்தப்படும் நாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் டி20 ஆசிய கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு போட்டிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டது, பாகிஸ்தானும், இலங்கையும் இணைந்து 6 அணிகள் கொண்ட போட்டியை நடத்தியது. கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை தொடரை அக்கிய அரபு அமீரகம் தான் நடத்தியது. சாம்பியன்ஷிப்பின் நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் இந்தியா மற்றும் இலங்கை தான். ஆதலால், இந்த சாம்பியன்ஷிப்பை அசோசியேட் உறுப்பு நாடுகள் நடத்த ஒதுக்க முடியுமா என்பதில் சில குழப்பம் உள்ளது. ஏனென்றால், முழு உறுப்பினர் ஆசிய நாட்டில் தான் சாம்பியன்ஷிப் நடத்தப்பட வேண்டும்.
இந்த முறையும் ஐக்கிய அரபு அமீரகம் ஆசிய கோப்பை தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், சில நாடுகளும் இந்த தொடரை நடத்த போட்டியில் இறங்கியுள்ளன.