இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா பேட்ஸ்மேனை ரன்னிங் ஓடும் போது குறுக்கிடும் வகையில் நடந்து கொண்ட நிலையில் அவருக்கு ஐசிசி விதி 2.12ன் படி ஒரு புள்ளி அபராதமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடந்தது. இதில், இந்தியா கடைசி வரை போராடி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஆலி போ மற்றும் டாம் ஹார்ட்லி இருவரும் தான்.
இங்கிலாந்து அணியின் 2ஆவது இன்னிங்ஸில் ஆலி போப் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பும்ரா பந்து வீசினார். அவர் வீசிய 81 ஆவது ஓவரை எதிர் கொண்ட ஆலி போப் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது பும்ரா அவருக்கு இடையூறு செய்யும் விதமாக நடந்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு துணை கேப்டனான பும்ராவும், தனது தவறுக்கு போப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பாக ஆலி போப் நடுவரிடம் புகார் செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் பும்ரா செய்தது ஐசிசி விதி 2.12ன் படி தவறு என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பும்ராவிற்கு ஒரு புள்ளி அபராதமாக வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் பும்ரா பெறும் முதல் அபராத புள்ளி இதுவாகும்.
அபராதமாக எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும், இது போன்று இன்னொரு அபராத புள்ளி பும்ரா பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். பொதுவாக போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் கிரிக்கெட் நன்னடத்தையை உறுதி செய்ய இந்த அபராத புள்ளி வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பும்ராவிற்கு இந்த அபராத புள்ளி வழங்கப்பட்டுள்ளது.