இந்த பையனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு.. டிராவிட்டின் பக்குவத்தை பிரதிபலித்த அண்டர் 19 வங்கதேச கேப்டன்

By karthikeyan VFirst Published Feb 10, 2020, 4:55 PM IST
Highlights

அண்டர் 19 வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி இளம் வயதிலேயே மிகுந்த முதிர்ச்சியடைந்தவராகவும், எதார்த்தை உணர்ந்த பக்குவம் கொண்டவராகவும் திகழ்கிறார். 
 

அண்டர் 19 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற வங்கதேச அணி, முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஜெய்ஸ்வால் மட்டுமே 88 ரன்களை குவித்தார். அதனால் இந்திய அணி வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்து கொடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. ஆனால் அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியின் பொறுப்பான மற்றும் முதிர்ச்சியான பேட்டிங் தான் அந்த அணியின் வெற்றிக்கு காரணம். ஐந்தாம் வரிசையில் களத்திற்கு வந்த கேப்டன் அக்பர் அலி, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானத்தை கடைபிடித்து ஆடினார். ஷமீம், அவிஷேக் ஆகியோர் அக்பர் அலி களத்திற்கு வந்த பின்னர் ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் கடும் நெருக்கடியான சூழலிலும் கூட அவசரமோ பதற்றமோ படாமல் நிதானத்தை கையாண்டார். ஆறு விக்கெட்டுக்கு பின்னர், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்ற எமோன், அக்பருடன் ஜோடி சேர்ந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடினார் அக்பர். இருவரும் இணைந்து வங்கதேச அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். எமோன் ஆட்டமிழந்தாலும் கடைசி வரை களத்தில் நின்று 43 ரன்கள் அடித்து வங்கதேச அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 

இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் எளிய இலக்காகவே இருந்தாலும் கூட, சீனியர் வீரர்கள் கூட சில நேரங்களில், அழுத்தம் காரணமாக தூக்கியடித்து ஆட்டமிழந்துவிடுவார்கள். ஆனால் இலக்கு குறைவானது என்பதால், அவசரப்படாமல் முடிந்தவரை சிங்கிள் எடுத்து கடைசி வரை கொண்டுபோவது போல் ஆடினாலே வென்றுவிடலாம் என்பதை உணர்ந்து, கடைசி வரை ரிஸ்க்கே எடுக்காமல் ஆடினார் அக்பர் அலி. 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

அதுமட்டுமல்லாமல், வங்கதேச அணியின் வெற்றி உறுதியான நிலையில், வெற்றி பெறுவதற்கு முன்பாகவே வங்கதேச வீரர்கள் எல்லாம் பவுண்டரி லைனில் நின்று கொண்டாட தொடங்கினர். வின்னிங் ரன்னுக்கு முன், மறுமுனையில் நின்ற வீரர் பவுண்டரி அடித்தார். அந்த பவுண்டரியால் ஸ்கோர் சமனடைந்தது. வெற்றிக்கு இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவை. அப்படியான சூழலில் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அந்த பவுண்டரி அடித்த வீரர் கொண்டாடியபோது, அவரிடம் அமைதி காத்து எஞ்சிய ஒரு ரன்னையும் அடிக்குமாறு சிக்னல் கொடுத்தார் அக்பர். 

கிரிக்கெட்டில் எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடந்து ஆட்டம் தலைகீழாக திரும்பலாம் என்ற எதார்த்தை உணர்ந்தவர் மட்டுமே ஆட்டத்தின் எந்த சூழலிலும், தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, அவற்றையெல்லாம் கடந்து நிதானம் காப்பார்கள். வெற்றி பெற்று விடுவோம் என்று தெரிந்தும்கூட, அந்த மகிழ்ச்சியை பெரிதாக காட்டிக்கொள்ளாமல், வெற்றி அடைவதில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தினார் அக்பர் அலி.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் குணம் இது. வெற்றி உறுதியாகிவிட்டாலும் கூட, வெற்றி பெறும் வரை கொண்டாடவோ மகிழ்ச்சியோ அடையமாட்டார். அந்த நிதானம் இருப்பதால், வெற்றிக்கு பின்னரும் கூட, பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார். அதேபோலத்தான் இருந்தது அக்பர் அலியின் செயல்பாடு. வங்கதேச அணிக்கு இந்த உலக கோப்பை மிகப்பெரிய விஷயம். ஆனால் அவ்வளவு பெரிய சாதனையை நோக்கி ஆடியபோதும், சாதனையை படைத்த பின்னரும் நிதானமாகவே இருந்தார் அக்பர் அலி. 

அதுமட்டுமல்லாமல் கோப்பையை வாங்கியதும், வீரர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கியதிலும் அவரது கேப்டன்சி திறனும் தலைமைத்துவ பண்பும் தெரிந்தது. அதேபோல, வெற்றி கொண்டாட்டத்தின்போது, வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கிண்டல் செய்ததால் மைதானத்திலேயே இரு அணி வீரர்களுக்கும் மோதல் மூண்டது. அதனால் சிறிது நேரம் பரபரப்பானது. அந்த சம்பவம் குறித்து பேசும்போது கூட, அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், தங்கள் அணி வீரர்களின் செயல்பாட்டிற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் அக்பர் அலி. 

Also Read - சாமர்த்தியமான மின்னல் வேக ஸ்டம்பிங்.. தோனியை நினைவுபடுத்திய அண்டர் 19 விக்கெட் கீப்பர்.. வீடியோ

அக்பர் அலி ஒரு நல்ல வீரர் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவர் விரைவில் வங்கதேச சீனியர் அணியில் இடம்பெறுவது மட்டுமல்லாமல், விரைவில் சீனியர் அணியை வழிநடத்தும் இடத்திற்கு உயர்வார் என்பதில் சந்தேகமில்லை. 
 

click me!