மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 8ஆவது ஐபிஎல் போட்டியில் அறிமுகமான டிராவ்ஸ் ஹெட் 18 பந்துகளில் 52 ரன்கள் அடிக்க, அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 8ஆவது போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது ஹைதராபாத்தின் ஹோம் மைதானம் என்பதால், அந்த அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். இதே போன்று பவுலிங்கில் ஜெயதேவ் உனத்கட் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. இந்த ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான குவெனா மபகா வீசினார். இவருக்கு வயது 17 ஆகிறது.
இந்த ஓவரில் அறிமுக வீரர் டிராவிஸ் ஹெட் தனது முதல் ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா 2ஆவது ஓவர் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் நழுவவிட்டார். அப்போது ஹெட் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதையடுத்து போட்டியின் 4.1 ஆவது ஓவரில் மாயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து அபிஷேக் சர்மா களமிறங்கினார். இதைத் தொடர்ந்து மீண்டும் மபகா பந்து வீச வந்தார். அந்த ஓவரில் ஹெட் 6,6,4,4 என்று விளாசினார். இதே போன்று பாண்டியா ஓவரிலும் 4, 4, 4 என்று ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி தெறிக்கவிட்டார். அதன் பிறகு ஜெரால்டு கோட்ஸி 6ஆவது ஓவர் வீச வந்தார். அந்த ஓவரில் மட்டும் அபிஷேக் சர்மா சிக்ஸர் அடித்தார். இதையடுத்து ஹெட் 4, 4, 6 என்று விளாசினார்.
பவர்பிளே முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் பவர்பிளேயில் முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணி 81 ரன்கள் குவித்துள்ளது.
பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த SRH,
81/1 vs MI, ஹைதராபாத், 2024
79/0 vs KKR, ஹைதராபாத், 2017
77/0 vs PBKS, ஹைதராபாத், 2019
77/0 vs DC, துபாய், 2020.
அதுமட்டுமின்றி இந்த பவர்பிளே ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 18 பந்தில் 52 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இது அவரது முதல் ஐபிஎல் போட்டி. அதுவும், குறைவான பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிவேகமாக ஐபிஎல் அரைசதம் vs MI (பந்துகள்)
14 – பேட் கம்மின்ஸ் (KKR) - புனே, 2022
18 – ரிஷப் பண்ட் (DC) – மும்பை, வான்கடே ஸ்டேடியம், 2018
18 – டிராவிஸ் ஹெட் (SRH) – ஹைதராபாத், 2024
19 – அஜின்க்யா ரஹானே (CSK) - மும்பை, வான்கடே ஸ்டேடியம், 2023
இவருடன் இணைந்து அபிஷேக் சர்மாவும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் ஹைதராபாத் அணி சார்பில் முதலிடம் பெற்றார். 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மா அடுத்த 3 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். கடைசியில் பியூஸ் சாவ்லா பந்தி 23 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதிவேகமாக IPL SRH அணிக்காக அரைசதங்கள் (பந்துகள்)
16 – அபிஷேக் சர்மா vs MI, ஹைதராபாத், 2024
18 – டிராவிஸ் ஹெட் vs MI, ஹைதராபாத், 2024
20 – டேவிட் வார்னர் vs CSK, ஹைதராபாத், 2015
20 – டேவிட் வார்னர் vs KKR, ஹைதராபாத், 2017
20 – மொயீசஸ் ஹென்ரிக்ஸ் vs RCB, ஹைதராபாத், 2015
21 – டேவிட் வார்னர் vs RCB, பெங்களூரு, 2016