நியூசிலாந்துக்கு எதிரா படுமோசமான டி20 ரெக்கார்டு.. இந்திய அணிக்கு காத்திருக்கும் கடும் சவால்

By karthikeyan VFirst Published Jan 22, 2020, 3:39 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக படுமோசமான வெற்றி விகிதத்தை பெற்றுள்ளது. 
 

அனைத்துவிதமான போட்டிகளிலும் அசத்திவரும் இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை எதிர்கொண்டு மூன்றுவிதமான போட்டிகள் அடங்கிய தொடரில் ஆடவுள்ளது. அதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. அங்கு அந்த அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்காகவே அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன என்பதால், டி20 கிரிக்கெட்டின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. 

அந்தவகையில், இந்திய அணியும் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் டி20 தொடரில் ஆடுவதுடன், அதிகபட்சமாக 5 டி20 போட்டிகளில் ஆடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி வைத்திருக்கும் மோசமான ரெக்கார்டை மழுங்கடிக்கும் வகையில், இந்த தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும். 

Also Read - நியூசிலாந்தில் ரோஹித் சர்மாவுக்கு காத்திருக்கும் சவால்.. முன்கூட்டியே எச்சரித்த சச்சின் டெண்டுல்கர்

அந்தவகையில் இந்திய அணிக்கு இது கடும் சவாலான தொடராகவே அமையும். ஏனெனில் இதுவரை இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியே இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி விகிதம் வெறும் 20% மட்டுமே. மற்ற எந்த அணிக்கு எதிராகவும் இந்திய அணி இவ்வளவு மோசமான வெற்றி விகிதத்தை பெற்றிருக்கவில்லை. 

சொந்த மண்ணில் ஆடுவது நியூசிலாந்துக்கு சாதகமான ஒரு சூழல் என்றால், ஏற்கனவே இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தியிருப்பதால், அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்திய அணியை எதிர்கொள்ளும். ஆனால் இந்திய அணியோ மோசமான ரெக்கார்டை மழுங்கடிக்கும் விதமாக நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடியாக வேண்டும். இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் ஆடும் என்பதால் இந்த தொடர் மிகக்கடுமையாக இருக்கும்.

click me!