கேஎல் ராகுலா? ரிஷப் பண்ட்டா? சாஸ்திரி அதிரடி

By karthikeyan VFirst Published Jan 22, 2020, 1:51 PM IST
Highlights

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நிலையில், இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். 
 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டுமே திருப்தியளிக்காத வகையில் இருந்ததால் அவர்மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் ஆடும்போது தலையில் பந்து பட்டதால், அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. 

எனவே அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல். இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் அவர் மிகச்சிறப்பாக கீப்பிங் செய்யவே, மூன்றாவது போட்டியில் ஆட ரிஷப் பண்ட் உடற்தகுதியுடன் இருந்தும்கூட ஓரங்கட்டப்பட்டார். பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி போட்டியிலும் கூட ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். 

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் உள்ளது இந்திய அணி நிர்வாகம். அதை உறுதி செய்யும் வகையில் பேசியிருந்தார் கேப்டன் கோலி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்த்து பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த வழிசெய்கிறது. அவர் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். ராகுலே விக்கெட் கீப்பராக தொடர்வது சரிவருகிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்குள்ளாக அவசரப்பட்டு மாற்றங்களை செய்ய தேவையில்லை. இப்போது ஆடிய பிளேயிங் லெவனை மாற்ற வேண்டியதற்கு அவசியம் இல்லை என்று கோலி தெரிவித்திருந்தார். 

எனவே நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே ரிஷப் பண்ட்டின் நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, விக்கெட் கீப்பிங் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நிறைய ஆப்சன்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். அது நல்லதுதான் என்று பதிலளித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றிருந்தாலும், கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார் என்பது உறுதி. 

click me!