மேத்யூ வேட் காட்டடி.. இலக்கை வெறித்தன்மா விரட்டிய முகமது நபி.. சீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான டி20 போட்டி.. கடைசி ஓவரில் த்ரில் முடிவு

By karthikeyan VFirst Published Jan 22, 2020, 1:25 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரில் பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் நேற்று நடந்த மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்குன் இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 190 ரன்களை குவித்தது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மேத்யூ வேட், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். வெறும் 29 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

மேத்யூ வேடுடன் இணைந்து மற்றொரு தொடக்க வீரரான மாகலிஸ்டர் ரைட்டும், ரெனெகேட்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அதிரடியாக ஆடிய ரைட்டும் அரைசதம் அடித்தார். அவர் 50 பந்தில் 70 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் வந்த வீரர்களில் மெக்டெர்மொட் மட்டுமே அதிரடியாக ஆடி 19 பந்தில் 38 ரன்கள் விளாசினார். இடையில் இறங்கிய 3 மற்றும் 4ம் வரிசை வீரர்கள் சரியாக ஆடவில்லை. வேட், ரைட் ஆகியோரின் அதிரடியால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 190 ரன்களை குவித்தது. 

191 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசினார். 

மூன்றாம் வரிசையில் இறங்கிய ஹார்பர் 6 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் வெப்ஸ்டெரும் முகமது நபியும் இணைந்து அதிரடியாக ஆடி, இலக்கை வெறித்தனமாக விரட்டினர். அதிரடியாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 85 ரன்களை குவித்தனர். 

கடைசி 2 ஓவர்களில் ரெனெகேட்ஸின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரின் முதல் பந்தில் ரன் அடிக்காத முகமது நபி, அடுத்த 2 பந்திலும் சிக்ஸர் விளாசிவிட்டு நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். வெறும் 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்து நபி ஆட்டமிழக்க, அதன்பின்னர் நம்பிக்கையை பெற்ற ஹரிகேன்ஸ் அணி, வெறித்தனமாக பந்துவீசியது. 

நபி அவுட்டான பின்னர், 19வது ஓவரின் கடைசி 2 பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. 19வது ஓவரில் ரெனெகேட்ஸ் அணி மொத்தமாக 13 ரன்கள் அடித்தது. எனவே கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள்ம் மட்டுமே தேவைப்பட்டது. அதுவும் நன்றாக செட்டில் ஆகியிருந்த வெப்ஸ்டர் களத்தில் இருந்தார். எனவே அந்த 11 ரன்களை எளிதாக அடித்திருக்கலாம்.

ஆனால் கடைசி ஓவரில் ரெனெகேட்ஸ் அணி வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்த வெப்ஸ்டர், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அடுத்த 4 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதையடுத்து ஹரிகேன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

ரெனெகேட்ஸ் நிர்ணயித்த இலக்கை வெறித்தனமாக விரட்டிய முகமது நபி, 19வது ஓவரில் ஆட்டமிழந்துதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. வெற்றிக்கு அருகில் நெருங்கிய ரெனெகேட்ஸை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 

click me!