ரஞ்சி தொடரில் தமிழ்நாடு - ஹைதராபாத் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. கடைசி இன்னிங்ஸில் 7 ஓவர் மட்டுமே பேட்டிங் ஆட கிடைத்ததால் தமிழ்நாடு அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.
முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் தமிழ்நாடு அணி முதல் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்டது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தமிழ்நாடு அணி:
பாபா இந்திரஜித் (கேப்டன்), சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், விஜய் சங்கர், பிரதோஷ் பால், ஆர் கவின், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அஷ்வின் கிறிஸ்ட், லக்ஷ்மிநாராயணன் விக்னேஷ், சந்தீப் வாரியர்.
ஹைதராபாத் அணி:
தன்மய் அகர்வால் (கேப்டன்), தெலுகுபல்லி ரவி தேஜா, தனய் தியாகராஜன், பிரதீக் ரெட்டி (விக்கெட் கீப்பர்), மிக்கில் ஜெய்ஸ்வால், அபிரத் ரெட்டி, ரோகித் ராயுடு, ஜாவீத் அலி, அனிகேத் ரெட்டி, பி புன்னையா, கார்த்திகேயா கக்.
முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான தன்மய் அகர்வால் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவர் 135 ரன்களை குவித்தார். பின்வரிசையில் ரவி தேஜா மற்றும் மிக்கேல் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் நன்றாக பேட்டிங் ஆடினர். ரவி தேஜா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ஜெய்ஸ்வால் 137 ரன்களை குவிக்க, ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 204 ரன்களை குவித்தனர். ஜெகதீசன் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆர் கவின் 36 ரன்கள் மட்டுமே அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த சுதர்சன் 179 ரன்களை குவிக்க, பாபா அபரஜித்தும் அபாரமாக பேட்டிங் ஆடிசதமடித்தார். அபரஜித் 115 ரன்களை குவித்தார். கேப்டன் இந்திரஜித் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 விக்கெட் இழப்பிற்கு 510 ரன்களை குவித்து தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
115 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஹைதராபாத் அணி, 2வது இன்னிங்ஸில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணி 143 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு வெறும் 144 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசிநாள் ஆட்டத்தில் கடைசி 7 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனாலும் அந்த 7 ஓவரில் 144 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் முயன்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே, அஷ்வின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்
இருவரும் இணைந்து ஹைதராபாத் பவுலிங்கை காட்டடி அடித்தனர். 22 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடிய ஜெகதீசன் 8 சிக்ஸர்களுடன் 60 ரன்களை குவித்தார். சாய் சுதர்சன் 20 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசினார். 7 ஓவரில் தமிழ்நாடு அணி 108 ரன்களை குவித்தது. ஜெகதீசன், சுதர்சன் எவ்வளவோ முயன்றும் இலக்கை அடிக்கமுடியவில்லை. 7 ஓவரில் 144 ரன்கள் என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத இலக்கு. ஆனால் அதை எடுக்க கடுமையாக முயன்றனர். ஆனாலும் போட்டி கடைசியில் டிராவில் முடிந்தது.