பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியா தான் டாஸ் வென்று பேட்டிங்கும் ஆடியது. அதன்படி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்கள் சேர்த்தார். கேஎல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷான் 33 ரன்களும் எடுக்கவே இந்தியா 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: கடைசி வரை போராடி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
பந்து வீச்சில் இலங்கை அணியைப் பொறுத்த வரையில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளும், சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளும் மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலமாக முதல் முறையாக ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு நாள் போட்டியில் ஸ்பின்னர்கள் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லலகே இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியின் வெற்றிக்கு தனஞ்சயா டி சில்வா மற்றும் துனித் வெல்லலகே இருவரும் போராடினர். எனினும், தனஞ்சயா டி சில்வா 41 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். சரித் அசலங்கா 22 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே வெல்லலகே கடைசி வரை போராடினார். அவர் மட்டுமே 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
எனினும், 41.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 9.3 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 10 ஒவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதே போன்று ஜஸ்ப்ரித் பும்ரா 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் ஓவர் உள்பட 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், லீக் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
சூப்பர் 4 சுற்று போட்டியானது கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. இது சுழலுக்கு சாதகமான மைதானம் என்பதால், குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.