இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் ஃபோர்ஸின் 4 ஆவது போட்டியில் முதல் முறையாக இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4ஆவது சூப்பர் 4 போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவருமே நிதானமாகவே ரன்கள் சேர்த்தனர். ஆனால், சுப்மன் கில் மட்டுமே 25 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து துனித் வெல்லலகே பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த விராட் கோலி அடுத்த 10 ரன்களில் இந்திய அணி சேர்த்த நிலையில் 3 ரன்களில் துனித் வெல்லலகே ஓவரில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார். பொறுமையாகவே விளையாட ஆரம்பித்தார்.
Sri Lanka vs India Super 4: என்ன கொடுமை சார், மழையால் போட்டி நிறுத்தம்!
கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் துனித் வெல்லலகே பந்தில் கிளீன் போல்டானார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டியில் தனது 51ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் கேஎல் ராகுல் களமிறங்கினார். அவரும் நிதானமாக ஆடவே தொடங்கினார். எனினும், அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 39 ரன்களில் வெல்லலங்கே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து ஹர்திக் பாண்டியா வந்தார். இதற்கிடையில் இஷான் கிஷான் 33 ரன்களில் அசலங்கா பந்தில் வெளியேறினார். அவர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துனித் வெல்லலங்கே பந்தில் வெளியேறினார். அடுத்து ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் அசலங்கா பந்தில் வெளியேறினார். ஜஸ்ப்ரித் பும்ரா 5 ரன்களில் அசலங்கா பந்தில் கிளீன் போல்டானார்.
இவரைத் தொடர்ந்து வந்த குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அசலங்கா பந்தில் வெளியேறினார். பும்ரா மற்றும் யாதவ் இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். தற்போது வரையில் இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மழையால் போட்டி நிறுத்தப்பட்டு அதன் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு கூடுதலாக 16 ரன்கள் எடுத்து மொத்தமாக 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில் அக்ஷர் படேல் 26 ரன்கள் எடுத்து தீக்ஷனா பந்தில் ஆட்டமிழந்தார். சிராஜ் 5 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். எனினும், ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 1036 ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக ஸ்பின்னர்கள் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 1997 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை அணியை பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் விக்கெட் கைப்பற்றவே இல்லை. துனித் வெல்லலகே 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் சரித் அசலங்கா 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 18 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசியாக மஹீஷ் தீக்ஷனா 9.1 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.