இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்தியா, துனித் வெல்லலகே மற்றும் சரித் அசலங்கா சுழலில் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்தார். கேஎல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷான் 33 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 214 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா வில்லனாக இருந்தார். பும்ராவின் 2.1 ஆவது ஓவரில் தொடக்க வீரர் பதும் நிசாங்கா 6 ரன்களில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் களமிறங்கினார்.
வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்த நிலையில், பும்ராவின் 6.4 ஆவது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து 7.1 ஆவது ஓவரில் சிராஜ் பந்தில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சதீரா சமரவிக்ரமா மற்றும் சரித் அசலங்கா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர்.
ஆனால், குல்தீப் யாதவ் இந்த கூட்டணியை பிரித்தார். அவரது 17.3ஆவது ஓவரில் சமரவிக்ரமா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று சரித் அசலங்காவும் ஸ்வீப் ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இலங்கை 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதன் பிறகு வந்த தனஞ்சயா டி சில்வா மற்றும் தசுன் ஷனாகா பொறுமையாக விளையாடினர். வந்த வேகத்திலே ஷனாகா பவுண்டரி அடித்து எப்படியும் ஜெயிச்சிருவோம் என்ற வகையில் நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 9 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து தான் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய துனித் வெல்லலகே களமிறங்கினார். வெல்லலகே மற்றும் தனஞ்சயா இருவரும் கூட்டணி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர்.
இலங்கை 99 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த நிலையில், இவர்கள் கூட்டணியால் இலங்கை அணியின் வெற்றிக்கான ரன்கள் குறைந்து கொண்டே வந்தது. பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் என்று மாறி மாறி பந்து வீசினர். எனினும், இலங்கையின் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் தான், முக்கியமான தருணத்தில் ஜடேஜா, தனஞ்சயாவின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
Sri Lanka vs India Super 4: என்ன கொடுமை சார், மழையால் போட்டி நிறுத்தம்!
அதன் பிறகு, ஷர்திக் பாண்டியா வீசிய 40.5ஆவது ஓவரில், மஹீஷ் தீக்ஷனாவின் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து குல்தீப் யாதவ் 41.1ஆவது ஓவரிலேயே கசுன் ரஜீதாவின் விக்கெட்டை கைப்பற்றினார். 2ஆவது பந்தில் மதீஷா பதிரவினாவின் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றி இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலமாக இலங்கை அணி 41.3ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை வெல்லலகே 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுவரையில் 13 போட்டிகளில் விளையாடி 13 போட்டிகளிலும் இலங்கை தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இந்த நிலையில் தான் 14 ஆவது போட்டியில் இலங்கை அணியின் தொடர் வெற்றிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. மேலும், இந்தப் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. எனினும், வரும் 15 ஆம் தேதி இந்தியா கடைசி சூப்பர் 4 போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. வங்கதேச அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
வரும் 14 ஆம் தேதி நடக்க உள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது சூப்பர் 4 போட்டி நடக்க உள்ளது. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.