இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரையிறுதிப் போட்டியில் மோதிய நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தான் இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு அணிகளும் தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
India vs New Zealand: தேனீ கடியால் பாதிக்கப்பட்ட இஷான் கிஷான் – அவசர அவசரமாக முடிந்த பயிற்சி!
இந்த நிலையில் தான் இன்று தரம்சாலாவில் நடக்கும் 21ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம் பெறமாட்டார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்த வீரராக ஆல்ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியாவிற்கு நிகர் மாற்று வீரர் அணியில் இல்லை என்றாலும், அவருக்குப் பதிலாக 2 வீரர்களை அணியில் சேர்க்க உள்ளது.
ஹர்திக் பாண்டியா களமிறங்கும் வரிசையில் இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட இருக்கிறார். பேட்டிங்கில் மட்டுமே அவர் களமிறங்க இருக்கும் நிலையில் பவுலிங்கிற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று அணி நிர்வாகம் தீவிர யோசனையில் இருந்த நிலையில் அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி என்று 2 வீரர்கள் மாற்று வீரர்களாக இருக்கிறார்கள்.
இதில், அதிகளவில் முகமது ஷமி தான் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக ஷமி களமிறங்க வாய்ப்புகள் இருக்கிறது. ஷர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டராக இருந்தாலும் அவரை இக்கட்டான கட்டத்தில் 10 ஓவர்கள் வீச வைக்க முடியாது. விக்கெட்டுகள் எடுக்கும் திறமை கொண்டிருந்தாலும், அதிக ரன்கள் கொடுக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
இல்லையென்றால் ரோகித் சர்மா மற்று விராட் கோலி ஆகியோர் பந்து வீச தயாராக இருந்தால் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். அப்படியில்லை என்றால் ஷமி தான் வாய்ப்பு வழங்கப்படும். நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சூர்யகுமார் யாதவ்விற்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு வலி வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஐஸ்பேக் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் குணமடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் சூர்யகுமார் குமார் யாதவ் களமிறங்கப்படவில்லை என்றால் இஷான் கிஷானுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படும். அப்படி இஷான் கிஷானுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்