ஐபிஎல் சீசன் முழுதும் ஆடாமல் பாதியில் இங்கிலாந்துக்கு திரும்பிய ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது என்று சுனில் கவாஸ்கர் மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. இன்னும் ஒருசில போட்டிகளே லீக் சுற்றில் மீதமுள்ள நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, ஆர்சிபி, மும்பை, சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.
இந்த சீசனின் தொடக்கத்தில் தோல்விகளை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, பின்னர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் ரேஸில் உள்ளது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பும்ரா இல்லாததால் பவுலிங் தான் பலவீனமாக அமைந்தது.
பும்ராவின் இழப்பை ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈடுசெய்வார் என்று நினைத்தால் அவரது பவுலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸ் இல்லாமல் ஆடிய ஆர்ச்சரால் பழையபடி 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசமுடியவில்லை. அவரது வேகம் குறைந்ததால் எதிரணி வீரர்கள் அடி பிரித்து மேய்ந்துவிட்டனர். ஆர்சிபிக்கு எதிராக 33 ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சர், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான 2 போட்டிகளில் 44 மற்றும் 56 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் மொத்தமாகவே வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்திய அவர், சீசனின் பாதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எந்த பங்களிப்புமே செய்யாமல் பாதியிலேயே கழண்டுகொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது என்று மிகக்காட்டமாக தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஆர்ச்சரால் மும்பை இந்தியன்ஸுக்கு என்ன அனுபவம் கிடைத்தது..? 2022ம் ஆண்டு ஐபிஎல்லில் காயம் காரணமாக ஆர்ச்சர் ஆடமுடியாது என்று தெரிந்தாலும் கூட, இந்த சீசனில் அவர் பயன்படுவார் என்ற நோக்கத்தில்தான் அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. ஆர்ச்சர் முழு ஃபிட்னெஸுடன் இல்லையென்றால் மும்பை அணிக்காக ஆட வந்திருக்கக்கூடாது. அதைவிடுத்து காசுக்காக ஆடவந்துவிட்டு பின்னர்ஃபிட்னெஸ் இல்லையென்று சிகிச்சைக்கு சென்றார். அதன்பின்னர் அவரது நாட்டுக்காக ஆடுவதற்காக சீசனின் பாதியிலேயே நாடு திரும்பிவிட்டார்.
நாட்டுக்காக ஆடுவதாக இருந்தால் ஐபிஎல்லில் ஆட வரக்கூடாது. ஐபிஎல்லில் ஆடுவதாக இருந்தால், முழுமையாக ஆடவேண்டும். இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவேவும் இதுமாதிரி சீசனின் பாதியில் சென்றுள்ளனர். ஐபிஎல் அணிகள் இதற்கு அனுமதிக்கக்கூடாது. பிளே ஆஃபிற்கு அவர்கள் ஆடும் அணி முன்னேறாது என்பது உறுதியாகிவிட்டால் ஒரு வாரத்திற்கு முன்பாகக்கூட செல்லலாம். ஆனால் அப்படியில்லை என்றால் அனுமதிக்கக்கூடாது. மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளிலும் மும்பை இந்தியன்ஸின் அணிகளில் ஆர்ச்சர் ஆடப்போவதாக கூறப்படுகிறது. இதெல்லாம் அர்த்தமில்லாத பேச்சு. இதுமாதிரி முழுமையாக ஆடாமல் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு கொடுப்பது நல்லது. இந்த சீசனில் ஆர்ச்சருக்கு மும்பை அணி ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது என்று கவாஸ்கர் மிகக்காட்டமாக கூறியுள்ளார்.