ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் ஹசல்வுட், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபாட், டேனியல் சாம்ஸ், அஷ்டன் அகர், ரிலே மெரிடித் ஆகியோர் உள்பட பல ஆஸ்திரேலியா வீரர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று துபாயில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார்.
உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபாட், அஷ்டன் அகர், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஆனால், உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடிய ஸ்மித் 302 ரன்கள் குவித்த நிலையில், நேற்றைய போட்டியில் அவர் ஏலம் எடுக்கப்படவில்லை. அடிப்படை விலை ரூ.2 கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவர் ஏலம் எடுக்கப்படவில்லை.
ஸ்மித் மட்டுமின்றி ஜோஷ் இங்கிலிஸ், ஜோஷ் ஹசல்வுட், சீன் அபாட் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ.2 கோடி என்று நிர்ணயித்திருந்த நிலையிலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இவர்கள் வரிசையில், டேனியல் சாம்ஸ் ரூ.1.5 கோடி என்றும் அஷ்டன் அகர் ரூ.1 கோடி என்றும் தங்களது அடிப்படை விலையை நிர்ணயித்திருந்தனர்.
எனினும், கடைசி வரை ஸ்மித், ஹசல்வுட், சீன் அபாட், டேனியல் சாம்ஸ், ரிலே மெரிடித் என்று யாரும் ஏலம் எடுக்கப்படவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஸ்மித் 9 ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியில் கேப்டனாக இடம் பெற்று விளையாடியுள்ளார். அதன் பிறகு அந்த அணிக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ் விளையாடியுள்ளார்.
இதுவரையில் 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், 2485 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்துள்ளார். 11 முறை அரைசதமும் அடித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு வீரரை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. கடந்த சீசனில் ஏலம் எடுக்கப்படாத டிராவிஸ் ஹெட்டை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.6.80 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் விளையாடிய பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நல்ல தொகைக்கு ஏலம் எடுகப்பட்ட நிலையில், அதே அணியில் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் ஹசல்வுட், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபாட், டேனியல் சாம்ஸ், அஷ்டன் அகர், ரிலே மெரிடித் ஆகியோர் ஆகிய ஆஸ்திரேஇய வீரர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.