பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா காயமடைந்த நிலையில், நாளை மறுநாள் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், லீக் போட்டியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் வெளியேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
இதில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒன்றில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது மற்றும் 3 ஆவது இடங்களில் இருந்தன.
இந்த நிலையில், தான் நேற்று ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். மழையால் போட்டி தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு மழை குறுக்கீடு காரணமாக 42 ஓவர்கள் போட்டியாக நடந்தது.
இதில் 42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியின் போது பீல்டிங்கில் இருந்த மஹீஷ் தீக்ஷனா பவுண்டரியை தடுக்க முயற்சித்த போது வலது கால் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓவரை முடித்தக் கொண்டு வெளியேறினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமான வீரர் என்பதால், அவரை உலகக் கோப்பைக்கு தயார் செய்யும் வகையில், காயம் குணமடையும் வரையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீக்ஷனாவிற்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால், அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை அணிக்காக இதுவரையில் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அவர் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தசைப்பிடிப்பு காரணமாக நாளை நடக்க உள்ள இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.