ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பெற்றது. இதே போன்று தான் இலங்கை விளையாடிய 2 போட்டிகளிலும் போராடி தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டிக்கு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் முன்னேறும்.
இந்த நிலையில் தான் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும், புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ள இலங்கையும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் தசுன் ஷனாகா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக சமீகா கருணாரத்னே மற்றும் லகிரு குமாரா இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இலங்கை:
பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனன்ஜெயா டி சில்வா, சமீகா கருணாரத்னே, துணித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷனா, லகிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா.
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் ஹசல்வுட், மார்னஷ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
இரு அணிகளும் இதற்கு முன்னதாக 103 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 63 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 36 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதே போன்று உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மேலும் ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா அணியிலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்குப் பதிலாக சமீகா கருணாரத்னே அணியில் இடம் பெற்றுள்ளார். குசால் மெண்டிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.