
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா - நிசாங்கா இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்து கொடுத்தனர். குணதிலகா 55 ரன்னிலும், நிசாங்கா 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் ஒருமுனையில் நிலைத்து நின்று நங்கூரம் போட்டு பொறுப்புடன் ஆட, தனஞ்செயா டி சில்வா 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும், 4வது விக்கெட்டுக்கு மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த அசலங்கா சிறப்பாக ஆடி 37 ரன்கள் அடித்தார். தசுன் ஷனாகா(6) மற்றும் சாமிகா கருணரத்னே(7) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
இதற்கிடையே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் குசால் மெண்டிஸ். பின்வரிசையில் இறங்கிய வனிந்து ஹசரங்கா 19 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். குசால் மெண்டிஸ் 86 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 50 ஓவரில் 300 ரன்களை குவித்த இலங்கை அணி, 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.