ENG vs NZ: சுவாரஸ்யமான கட்டத்தில் 2வது டெஸ்ட்..! இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Jun 14, 2022, 5:01 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை கடைசி நாள் ஆட்டத்தில் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.
 

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது.

நியூசிலாந்து அணியின் டேரைல் மிட்செல்(190) மற்றும் டாம் பிளண்டெலின் (106) அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அபாரமாக பேட்டிங் ஆடி 539 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஜோ ரூட்(176) மற்றும் ஆலி போப்(145) ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 539 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

14 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வேகமாக அடித்து ஆடி முடிந்தவரை நிறைய ஸ்கோர் செய்து, இங்கிலாந்தை பேட்டிங் ஆடவைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை மனதில் கொண்டு முடிந்தவரை அடித்து ஆடியது. தொடக்க வீரர் வில் யங்(56), டெவான் கான்வே(52) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அதன்பின்னர் டேரைல் மிட்செல் மட்டும் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் 249 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு மிட்செலுடன் ஜோடி சேர்ந்த டிரெண்ட் போல்ட் சற்றுநேரம் தாக்குப்பிடித்து 17 ரன்கள் அடிக்க, அதை பயன்படுத்தி டேரைல் மிட்செல் அடித்து ஆடி அரைசதத்தை கடந்து 61 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 284 ரன்கள் அடிக்க, மொத்தமாக 298 ரன்கள் முன்னிலை பெற்று 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

கடைசி நாள் ஆட்டத்தின் 2 செசன்கள் முழுமையாக இருப்பதுடன் முதல் செசனிலும் முக்கால் மணி நேரம் எஞ்சியிருப்பதால் இந்த இலக்கு அடிக்கக்கூடியதுதான். அதேவேளையில், இலக்கை விரட்டும் வேகத்தில் விக்கெட்டுகளும் விழக்கூடும். எனவே இந்த போட்டி மிக சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.
 

click me!