
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது. முதல் டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடிய தினேஷ் சண்டிமால் இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி 80 ரன்களை குவித்தார். தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ (50) மற்றும் பின்வரிசையில் டிக்வெல்லா(51) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். கருணரத்னே (40), மேத்யூஸ்(42) ஆகியோரும் பங்களிப்பு செய்ய முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது இலங்கை அணி.
இதையும் படிங்க - இந்திய அணி 2 உலக கோப்பையை ஜெயிக்க முடியாம போனதுக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - ரவி சாஸ்திரி
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம்(16), முகமது ரிஸ்வான் (24) ஆகியோர் ஏமாற்றமளிக்க, இமாம் உல் ஹக் (32), அப்துல்லா ஷாஃபிக்(0) ஆகியோரும் சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரில் அகா சல்மான் மட்டும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சல்மான் 62 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்ப வெறும் 231 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது பாகிஸ்தான் அணி.
இதையும் படிங்க - நீங்க ஒருநாள் கிரிக்கெட்டில் தான் 500 விக்கெட் வீழ்த்தியிருக்கீங்க..! வாசிம் அக்ரமுக்கு சல்மான் பட் பதிலடி
இதையடுத்து 147 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 59 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட, ஆஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகிய இருவரும் பேட்டிங் ஆடிவருகின்றனர். ஏற்கனவே 200 ரன்களுக்கு மேல் இலங்கை அணி முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த ஜோடியை பிரிக்காவிட்டால் பாகிஸ்தான் நிலை பரிதாபமாகிவிடும்.