
1996ல் ரணதுங்கா கேப்டன்சியில் உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, அடுத்த 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது. ஜெயசூர்யா, முரளிதரன், அட்டப்பட்டு, சமிந்தா வாஸ், சங்கக்கரா, ஜெயவர்தனே, மலிங்கா என பல தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, 2007 மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பைகளில் ஃபைனல் வரை சென்று ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.
மிகச்சிறந்த டாப் அணியாக திகழ்ந்த இலங்கை அணி, அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அணியாகவே மதிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 1ம் தேதி நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்வி, ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் 428வது தோல்வி இது.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி. இந்த பட்டியலில் 427 தோல்விகளுடன் இந்திய அணி 2ம் இடத்திலும், 414 தோல்விகளுடன் பாகிஸ்தான் அணி 3ம் இடத்திலும் உள்ளன.
டி20 கிரிக்கெட்டிலும் அதிக தோல்விகள் அடைந்த அணி இலங்கை அணி தான். டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 70 தோல்விகளை அடைந்துள்ளது இலங்கை அணி.