வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்கிய அசலங்கா.. ராஜபக்‌ஷேவும் அதிரடி பேட்டிங்..! இலங்கை அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 24, 2021, 7:47 PM IST
Highlights

வங்கதேசத்திற்கு எதிரான  சூப்பர் 12 சுற்று போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.
 

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் 10 ரன்னிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான முகமது நைம்  மற்றும் சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடி 3 விக்கெட்டுக்கு 73 ரன்களை குவித்தனர்.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நைம் 52 பந்தில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த முஷ்ஃபிகுர் ரஹீம், 37 பந்தில் 57 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று 20 ஓவரில் வங்கதேச அணி 171 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார்.

இதையடுத்து 172 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்த அசலங்கா அருமையாக ஆடினார். இருவரும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், நிசாங்கா 24 ரன்னில் ஷகிப் அல் ஹசனின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ டக் அவுட்டானார்.

வனிந்து ஹசரங்காவும் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அசலங்காவுடன் ஜோடி சேர்ந்த ராஜபக்‌ஷே பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். இருவருமே மாறி மாறி அடித்து ஆட, இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய அசலங்கா அரைசதம் அடிக்க, இலக்கை நெருங்க நெருங்க பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார் அசலங்கா. அசலங்காவின் கேட்ச்சை தவறவிட்ட லிட்டன் தாஸ், ராஜபக்‌ஷேவின் கேட்ச்சையும் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவருமே அரைசதம் அடித்தனர். 

அரைசதம் அடித்த ராஜபக்‌ஷே 53 ரன்னில் ஆட்டமிழக்க, 49 பந்தில் 80 ரன்களை குவித்த அசலங்கா, கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அசலங்காவின் அதிரடியான பேட்டிங்கால் 172 ரன்கள் என்ற கடின இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.
 

click me!