உலகக் கோப்பை 4 ஆவது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் அதிகபட்சமாக 428 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 4ஆவது லீக் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் ஆடியது.
Hangzhou Asian Games 2023: 4 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி – கபடியில் இந்திய அணிக்கு தங்கம்!
இதில், குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும், பவுமா 8 ரன்களில் தில்ஷன் மதுஷங்கா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து குயிண்டன் டி காக் உடன் ரஸி வான் டெர் டுசென் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் டி காக் தனது 31ஆவது ஒரு நாள் அரைசதத்தை பதிவு செய்தார்.
இதே போன்று வான் டெர் டூசென் தனது பங்கிற்கு அரைசதம் அடித்தார். இதையடுத்து இருவரும் சதம் அடித்தனர். டி காக் பவுண்டரி அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 83 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்த பந்திலேயே பதிரனா ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி காக் மற்றும் வான் டெர் டூசென் ஜோடி 2 ஆவது விக்கெட்டிற்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் 18 சதங்கள் அடித்துள்ளார். மேலும், ஐசிசி போட்டிகளில் குயீண்டன் டி காக் அதிகபட்சமாக 100 ரன்கள் குவித்துள்ளார். அதன் பிறகு எய்டன் மார்க்ரம் களமிறங்கினார்.
இதே போன்று வான் டெர் டூசென் உலகக் கோப்பையில் சதம் விளாசினார். அவர் 103 பந்துகளில் 100 ரன்கள் குவித்துள்ளார். இறுதியாக வான் டெர் டூசென் 110 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஹென்றிச் கிளாசென் களமிறங்கினார்.
எய்டன் மார்க்ரம் அதிரடியாக விளாடி ரன்கள் குவித்தார். அவர் 49 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலமாக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக, கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்திருந்தார். கிளென் மேக்ஸ்வெல் 51 பந்துகளிலும், ஏபிடிவிலியர்ஸ் 52 பந்துகளிலும் சதம் விளாசியிருந்தனர்.
எனினும், மார்க்ரம் 54 பந்துகளில் 14 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, டேவிட் மில்லர் களமிறங்கினார். ஒரு புறம் கிளாசென் 32 ரன்களில் ஆட்டமிழக்க மார்கோ ஜான்சென் களமிறங்கினார். இதில், மில்லர் 39 ரன்னுடனும், ஜான்சென் 12 ரன்னுடனும் களத்தில் இருக்க தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு அதிகபட்சமாக 428 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் ஒரு அணி 428 ரன்கள் குவிப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால், உலகக் கோப்பையில் 3 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியா 417 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டிகளில் 428/5, 438/4, 438/9, 439/2 என்று ரன்கள் குவித்துள்ளது.