முதல் டெஸ்ட்டில் ஆஸி.,யிடம் மண்டியிட்டு சரணடைந்த தென்னாப்பிரிக்கா..! சதத்தை நோக்கி டிராவிஸ் ஹெட் ஆட்டம்

By karthikeyan VFirst Published Dec 17, 2022, 5:22 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலிய 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் 60 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் அந்த இடத்தை இழக்க வாய்ப்புள்ளது. எனவே தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவது அவசியம். 

வெற்றி கட்டாயத்துடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

ஜாகிர் ஹசன் சதம்; 2வது இன்னிங்ஸில் அக்ஸர் படேல் சிறப்பான பவுலிங்! முதல் டெஸ்ட்டில் வெற்றியை நெருங்கிய இந்தியா

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, ராசி வாண்டர் டசன், டெம்பா பவுமா, கயா ஜாண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் கைல் வெரெய்ன் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். வெரெய்ன் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி. டெம்பா பவுமா 38 ரன்கள் அடித்தார். எர்வீ மற்றும் ரபாடா ஆகிய இருவரும் தலா 10 ரன்கள் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திற்கோ அல்லது டக் அவுட்டோ ஆக, அந்த அணி 152 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கம்மின்ஸ் மற்றும் போலந்த் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டக் அவுட்டானார். உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் தலா 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 27 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி, 4வது விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். ஸ்மித் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் 78 ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது. சதத்தை நோக்கி பேட்டிங் ஆடிவரும் டிராவிஸ் ஹெட் 78 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
 

click me!