ஜாகிர் ஹசன் சதம்; 2வது இன்னிங்ஸில் அக்ஸர் படேல் சிறப்பான பவுலிங்! முதல் டெஸ்ட்டில் வெற்றியை நெருங்கிய இந்தியா

By karthikeyan VFirst Published Dec 17, 2022, 4:46 PM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு 241 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணிக்கு 4 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டது.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20), கோலி(1)ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ரிஷப் பண்ட் 46 ரன்கள் அடித்தார். புஜாரா -ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 149 ரன்களை குவித்தது. புஜாரா 90 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களுக்கும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர். அதன்பின்னர் அஷ்வின் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 58 ரன்களையும், குல்தீப் யாதவ் 40 ரன்களையும் விளாச முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி குல்தீப்பின் சுழல் மற்றும் சிராஜின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு இளம் தொடக்க வீரரான ஷுப்மன் கில் அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 110 ரன்களை குவிக்க, முதல் இன்னிங்ஸில் சதத்தை தவறவிட்ட புஜாரா, 2வது இன்னிங்ஸில் சதமடித்தார். புஜாரா 102 ரன்களுடன் களத்தி இருக்க, 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை குவித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்திய அணி.

மொத்தமாக இந்திய அணி 511 ரன்கள் முன்னிலை பெற, 512 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவரும் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஜாகிர் ஹசன் மற்றும் நஜ்முல் ஹுசைன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த நஜ்முல் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் யாசிர் அலி (5), லிட்டன் தாஸ்(19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி சதமடித்த ஜாகிர் ஹசன் 100 ரன்களுக்கு அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

டி20 உலக கோப்பையில் அந்த வீரரை எடுக்காதது தான் இந்திய அணி செய்த மாபெரும் தவறு..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

யாசிர் அலியை வீழ்த்திய அக்ஸர் படேல், முஷ்ஃபிகுர் ரஹிம் (23) மற்றும் நூருல் ஹசன்(3) ஆகியோரையும் வீழ்த்த, 4ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ஷகிப் அல் ஹசன் 40 ரன்களுடனும் மெஹிடி ஹசன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணியின் கையில் 4 விக்கெட் மட்டுமே இருக்கும் நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணியின் வெற்றிக்கு 241 ரன்கள் தேவை. ஆனால் இந்திய அணிக்கு 4விக்கெட் மட்டுமே தேவை என்பதால், இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டது.
 

click me!