இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடி 396 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 209 ரன்கள் குவித்தார்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை விளையாடி ஒரே நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார். மேலும், அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. இதில், ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் நடையை கட்டினார். நிதானமாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 9 ரன்னிலும், அக்ஷர் படேல் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ஆவது இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் நிதானமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார்.
மேலும், 7 ஆண்டுகளுக்கு பிறகு நம்பர் 3ல் களமிறங்கிய ஒரு வீரர் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், சுப்மன் கில் 104 ரன்களில் ஆட்டமிழந்தார்.