IND vs NZ அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய Shreyas Iyer..! டீ பிரேக்கிற்கு முன் பிரேக் கொடுத்த சௌதி

Published : Nov 28, 2021, 02:31 PM IST
IND vs NZ அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய Shreyas Iyer..! டீ பிரேக்கிற்கு முன் பிரேக் கொடுத்த சௌதி

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸில் இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை, பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து, சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளார்.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி கான்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. 

இந்திய அணியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக பேட்டிங் ஆடி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 105 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில் (52) மற்றும் ஜடேஜா (50) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் 38 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது.

முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3ம் நாள் ஆட்டத்தை யங்கும் டாம் லேதமும் தொடர்ந்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், வில் யங்கை 89 ரன்களில் வீழ்த்தி அஷ்வின் பிரேக் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனை 18 ரன்னில் உமேஷ் யாதவ் வீழ்த்த, அதன்பின்னர் சீனியர் வீரரான ரோஸ் டெய்லர் (11), ஹென்ரி நிகோல்ஸ் (2) ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதத்தை நெருங்கிய டாம் லேதம் (95), டாம் பிளண்டெல் (13) மற்றும் சௌதி (5) ஆகிய 5 வீரர்களையும் வீழ்த்தினார் அக்ஸர் படேல். கடைசி 2 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்த, 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.

49 ரன்கள்  முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2வது ஓவரிலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் அடித்திருந்தது.

4ம் நாளான இன்றைய ஆட்டத்தை மயன்க் அகர்வாலும் புஜாராவும் தொடர்ந்தனர். புஜாரா (22), ரஹானே (4), மயன்க் அகர்வால் (17), ஜடேஜா (0) ஆகியோர் முதல் செசனிலேயே மளமளவென ஆட்டமிழந்தனர். 51 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணியை ஷ்ரேயாஸ் ஐயரும் ரவிச்சந்திரன் அஷ்வினும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவிற்கு ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்த அஷ்வின் 62 பந்தில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ரிதிமான் சஹாவும் அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். 2வது செசனில் நன்றாக செட்டில் ஆனபின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகளாக அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அறிமுக டெஸ்ட்டிலேயே முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். டீ பிரேக்கிற்கு முந்தைய கடைசி ஓவரில் டிம் சௌதியின் பவுலிங்கில் ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டீ பிரேக்கின்போது இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.

எனவே மொத்தமாக இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. டீ பிரேக்கிற்கு பின் ரிதிமான் சஹாவுடன் அக்ஸர் படேல் ஜோடி சேர்ந்து ஆடுவார். 250 ரன்களுக்கு அதிகமான இலக்கு நிர்ணயித்தாலே அது நியூசிலாந்து அணிக்கு கடைசி இன்னிங்ஸில் கடினமாக இருக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!