IND vs NZ எவன்டா சொன்னது நான் ஒயிட்பால் பிளேயர்னு..? டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய பின் அக்ஸர் படேல் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 27, 2021, 10:05 PM IST
Highlights

தான் என்றைக்குமே தன்னை வெறும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர் என்று நினைத்ததில்லை என்று அக்ஸர் படேல்  தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி கான்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. 

இந்திய அணியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக பேட்டிங் ஆடி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 105 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில் (52) மற்றும் ஜடேஜா (50) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் 38 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது.

முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை யங்கும் டாம் லேதமும் தொடர்ந்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், வில் யங்கை 89 ரன்களில் வீழ்த்தி அஷ்வின் பிரேக் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனை 18 ரன்னில் உமேஷ் யாதவ் வீழ்த்த, அதன்பின்னர் சீனியர் வீரரான ரோஸ் டெய்லர் (11), ஹென்ரி நிகோல்ஸ் (2) ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதத்தை நெருங்கிய டாம் லேதம் (95), டாம் பிளண்டெல் (13) மற்றும் சௌதி (5) ஆகிய 5 வீரர்களையும் வீழ்த்தினார் அக்ஸர் படேல். கடைசி 2 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்த, 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.

49 ரன்கள்  முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2வது ஓவரிலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் அடித்துள்ளது.

இது அக்ஸர் படேலின் 4வது சர்வதேச டெஸ்ட் போட்டி. ஆனால் அதற்குள்ளாக 5 முறை, இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் ஆடிய டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி 4 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ஸர் படேல், தன்னை வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர் என்று கூறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

அதுகுறித்து பேசிய அக்ஸர் படேல், என்னை வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர் என்று சொன்னது யார் என்று தெரியவில்லை. நான் எப்போதெல்லாம் முதல் தர கிரிக்கெட்டிலோ அல்லது இந்தியா ஏ அணிக்காக ஆடியிருக்கிறேனோ அப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். நான் என்றைக்குமே என்னை வெறும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர் என்று நினைத்ததில்லை. ஒரு வீரர் தன்னைத்தானே, வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர் அல்லது சிவப்பு பந்து கிரிக்கெட் வீரர் என்று நினைப்பதெல்லாமே அவரவர் மனநிலையை பொறுத்ததுதான். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இங்கிலாந்துக்கு எதிராக ஆட வாய்ப்பு பெற்றேன்; நன்றாக ஆடினேன். அனைத்து கிரெடிட்டும், என்னை நம்பி வாய்ப்பளித்த அணிக்கே சாரும் என்று அக்ஸர் படேல் தெரிவித்தார்.
 

click me!