IPL 2022 டெல்லி கேபிடள்ஸ் தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான்..!

By karthikeyan VFirst Published Nov 27, 2021, 10:24 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன.

சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடிவந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக இணைகின்றன. அதனால் அடுத்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன.

எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர். இந்நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகிவருகிறது. முன்னாள் வீரர்களும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர்.

வரும் 30ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு சீசனையும் எதிர்கொள்ளும் டெல்லி கேபிடள்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கிறது என்று பார்ப்போம்.

டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்(கேப்டன்), பிரித்வி ஷா, அக்ஸர் படேல் மற்றும் ககிசோ ரபாடா ஆகிய 4 வீரர்களை தக்கவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015லிருந்து அந்த அணியில் ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவிக்கவுள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. ஐபிஎல்லில் அறிமுகமான 2015 ஐபிஎல் சீசனிலிருந்து டெல்லி அணிக்காக ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர், 2018ல் சீசனின் இடையே கௌதம் கம்பீர் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக கடைசியாக நடந்த ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை. அதனால் கேப்டன்சி ரிஷப் பண்ட்டிடம் கொடுக்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் 2வது பாதி சீசனில் ஃபிட்னெஸுடன் டெல்லி அணிக்கு திரும்பியபோதிலும், ரிஷப் பண்ட்டே கேப்டனாக தொடர்ந்தார். ஷ்ரேயாஸ் ஐயரிடம் மீண்டும் கேப்டன்சி கொடுக்கப்படும் என கருதப்பட்ட நிலையில், அதை டெல்லி அணி செய்யவில்லை. எனவே ஷ்ரேயாஸ் ஐயருமே தன்னை கேப்டனாக நியமிக்கும் அணிக்காகவே ஆட விரும்புவதாக தெரிகிறது. இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!