நீங்களா ஏன் பயந்து ஓடுறீங்க..? மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் தெறிச்சு ஓடியிருக்கக்கூடாது - ஷோயப் அக்தர்

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 9:47 PM IST
Highlights

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அதற்காக மற்ற அணிகளை போல பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்கும் நிலையில், இவர்கள் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். 2019ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக இருந்துவரும் மிஸ்பாவும் வக்காரும், டி20 உலக கோப்பைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷோயப் அக்தர், ரமீஸ் ராஜா தங்களை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்கவிட வாய்ப்பே இல்லை என்று கருதியதால், அவர்கள் விலகியிருக்கக்கூடும். அவர்கள் இருவரும் விலகியதன் மூலம், அவர்களின் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உங்களை(மிஸ்பா மற்றும் வக்கார்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடும் என்று கருதினால், அதை அவர்களை செய்யவிட வேண்டுமே தவிர, நீங்களாக ஓடக்கூடாது. டி20 உலக கோப்பையில் உங்களது 100% உழைப்பை கொடுத்துவிட்டு அதன்பின்னர் தான் விலகியிருக்க வேண்டும். அதற்குள்ளாக எதற்கு ஓட வேண்டும்..? என்று அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!