#ENGvsIND 4வது டெஸ்ட்: அரை நூற்றாண்டுக்கு பின் ஓவலில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியா..!

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 9:20 PM IST
Highlights

அரை நூற்றாண்டுக்கு பின்(1971) லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதுடன், ஒரு போட்டி டிரா ஆனதால் 1-1 என தொடர் சமனில் இருந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது. ஷர்துல் தாகூர் அதிகபட்சமாக 57 ரன்களும், கோலி 50 ரன்களும் அடித்தார்கள். அவர்களை தவிர முதல் இன்னிங்ஸில் வேறு யாருமே சரியாக ஆடாததால் 191 ரன்களுக்கே சுருண்டது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(127), புஜாரா(61), ராகுல்(46), விராட் கோலி(44) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் பின்வரிசையில் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால்(50) 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ்(25) மற்றும் பும்ரா(24) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.

367 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 368 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் 4ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்கவில்லை. 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 77 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்திலும் இருவரும் நன்றாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 5 ரன்னில் ரன் அவுட்டானார்.

அரைசதம் அடித்த ஹசீப் ஹமீத் ஜடேஜாவின் பந்தில் கொடுத்த கேட்ச்சை மிட் ஆன் திசையில் நின்ற முகமது சிராஜ் தவறவிட்டார். ஹசீப் ஹமீதுடன் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வழக்கம்போலவே பொறுப்புடன் தெளிவாக ஆடினார். எனவே இந்திய அணி வெற்றி பெற இந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 

அந்த நேரத்தில் ஹசீப் ஹமீதை அருமையான ஸ்பின் பந்தின் மூலம் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்தை குத்தி டர்ன் செய்து ஆஃப் ஸ்டம்ப்பை கழட்டினார் ஜடேஜா. ஹமீத் 63 ரன்களில் ஆட்டமிழக்க, அதிலிருந்து ஆரம்பித்தது இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரின் சரிவு.

ஆலி போப்(2), ஜானி பேர்ஸ்டோ(0) ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்த, மொயின் அலியை ஜடேஜா டக் அவுட்டாக்கி அனுப்பினார். ஜோ ரூட்டை 36 ரன்களுக்கு ஷர்துல் தாகூர் வீழ்த்த, கிறிஸ் வோக்ஸ்(18), ஓவர்டன்(10) மற்றும் ஆண்டர்சன்(2) ஆகிய மூவரையும் உமேஷ் யாதவ் வீழ்த்த 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இதையடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 1971ம் ஆண்டுக்கு பின் 50 ஆண்டுகள் கழித்து லண்டன் ஓவலில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
 

click me!