விஜய் ஹசாரே தொடரின் ஃபைனலில் மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது சௌராஷ்டிரா அணி.
உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரின் ஃபைனலில் மகாராஷ்டிராவும் சௌராஷ்டிராவும் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி வீரர்களை வேகமாக ரன் அடிக்கவிடாமல் சௌராஷ்டிரா சீனியர் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் கட்டுப்படுத்தினார். தொடக்க வீரர் பவன் ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சத்யஜித் (27) மற்றும் அங்கித் (16) ஆகிய இருவரும் மந்தமாக பேட்டிங் ஆடி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மகாராஷ்டிரா அணி 25 ஓவரில் 80 ரன்கள் மட்டுமே அடித்தது.
கமெண்ட்ரியின்போது ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தனது பொறுப்பை உணர்ந்து நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இறுதிப்போட்டியிலும் சதமடித்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும், களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடி சதமடித்த ருதுராஜ், 131 பந்தில் 108 ரன்களை குவித்தார். அதன்பின்னர் அஸீம் காஸி 37 ரன்களும், நௌஷாத் ஷேக் 31 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் 248 ரன்கள் அடித்த மகாராஷ்டிரா அணி, 249 ரன்களை சௌராஷ்டிராவிற்கு இலக்காக நிர்ணயித்தது.
சௌராஷ்டிரா அணியின் சீனியர் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். சிராக் ஜானி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
249 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் ஷெல்டான் ஜாக்சன் மற்றும் ஹர்விக் தேசாய் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த ஹர்விக் தேசாய், 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜெய் கோஹில் (0), சமர்த் வியாஸ் (12), அர்பித் வசவடா (15), பிரெரக் மன்கத் (1) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய சீனியர் வீரர் ஷெல்டான் ஜாக்சன் சதமடித்தார்.
சதமடித்த ஷெல்டான் ஜாக்சன் கடைசிவரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து கொடுத்தார். 6வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த சிராக் ஜானி பொறுப்புடன் பேட்டிங் ஆடி 30 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றார். சதமடித்த ஷெல்டான் ஜாக்சன், 47வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து 133 ரன்களை குவித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்.
5 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தி வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்றது.