ஷமி - ஜடேஜா அசத்தல்.. மளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா.. வெற்றியின் விளிம்பில் இந்தியா

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 11:24 AM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது.

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 323 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 395 ரன்கள் என்ற இலக்குடன் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான வீரரான டீன் எல்கரை நேற்றே வீழ்த்திவிட்டார் ஜடேஜா. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் அடித்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை மார்க்ரமும் டி ப்ருய்னும் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அஷ்வின், அந்த ஓவரில் டி ப்ருய்னை வீழ்த்தினார். இது அஷ்வினின் 350வது டெஸ்ட் விக்கெட். 

டி ப்ருய்னின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதை அடுத்து, பவுமா, டுப்ளெசிஸ் மற்றும் டி காக் ஆகிய மூவரையும் கிளீன் போல்டு செய்து அனுப்பினார் ஷமி. 60 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிவந்த மார்க்ரமை ஜடேஜா அவரே பந்துவீசி அவரே அபாரமான கேட்ச்சையும் பிடித்து வெளியேற்றினார். 

அதே ஓவரில் ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜையும் டக் அவுட் செய்து அனுப்பினார் ஜடேஜா. ஒரே ஓவரில் மார்க்ரம், ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய மூவரையும் அவுட்டாக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஜடேஜா. 

70 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணியில், முத்துசாமியும் டேன் பீட்டும் இணைந்து ஆடிவருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகளே தேவை என்பதால் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. 

click me!