சொந்த மண்ணில் இலங்கையிடம் மரண அடி வாங்கிய பாகிஸ்தான்.. டி20 போட்டியில் படுதோல்வி

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 10:12 AM IST
Highlights

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், டி20 தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. 

லாகூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகாவும் ஃபெர்னாண்டோவும் இணைந்து அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். ஃபெர்னாண்டோ 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சிறப்பாக ஆடி அரைசதமடித்த குணதிலகா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பானுகா ராஜபக்சா மட்டுமே 30 ரன்களுக்கு மேல் சேர்த்தார். ராஜபக்சாவை 16வது ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஹஸ்னைன், அதற்கடுத்து அவர் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ஷனாகாவையும் இரண்டாவது பந்தில் ஜெயசூரியாவையும் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. 

166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாம் அதிரடியாக தொடங்கினார். ஆனால் இரண்டாவது ஓவரிலேயே 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உமர் அக்மல் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான ஷேஷாத்தும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

கேப்டன் சர்ஃபராஸ் அகமது 24 ரன்களிலும் இஃப்டிகார் அகமது 25 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பாகிஸ்தான் அணி 18வது ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது. 
 

click me!