ரோஹித், புஜாரா, கோலி, ஜடேஜா, ரஹானேனு ஆளாளுக்கு அடிச்சு நொறுக்கிட்டாங்க.. தோல்வியை தவிர்க்குமா தென்னாப்பிரிக்கா..?

By karthikeyan VFirst Published Oct 5, 2019, 4:57 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்த இந்திய அணி, 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் எல்கர், டி காக் ஆகியோரின் அபாரமான சதம் மற்றும் டுப்ளெசிஸின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் அந்த அணி 431 ரன்கள் அடித்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் காலையில்தான் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை முடித்தது. 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி முடிந்தவரை விரைவில் ரன்களை சேர்த்துவிட்டு தென்னாப்பிரிக்காவை பேட்டிங் ஆட விட வேண்டும் என்பதால், அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால், இந்த இன்னிங்ஸில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித்தோ அடித்து ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா, மந்தமாக தொடங்கினாலும், களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆச்சரியப்படுத்தினார். அரைசதம் அடித்த புஜாரா 81 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். 

சதத்திற்கு பின்னர் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய ரோஹித், 127 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜடேஜா, கோலி, ரஹானே ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ரன்களை சேர்த்தனர். ஜடேஜா 3 சிக்ஸர்களுடன் 32 பந்துகளில் 40 ரன்களை அடித்தார். அவருக்கு அடுத்து களத்திற்கு வந்த ரஹானே பவுண்டரிகளாக விளாசினார். ரஹானே 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 27 ரன்களையும் கோலி 25 பந்துகளில் 3 பவுண்டைர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களையும் அடித்தனர். 

இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை குவித்த இந்திய அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் 13 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி 395 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிவருகிறது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த இலக்கை அடிப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடாமல் இருந்து, போட்டியை டிரா செய்யவே தென்னாப்பிரிக்கா முயலும். அதேநேரத்தில் இந்திய அணியோ வெற்றி பெறத்தான் நினைக்கும். என்ன நடக்கிறது என்பதை நாளை பார்ப்போம். 

click me!