SMAT 2021 ஃபைனல்: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த ஷாருக்கான்..! கர்நாடகாவை வீழ்த்தி கோப்பையை வென்றது தமிழ்நாடு

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 3:43 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் ஃபைனலில் கர்நாடகா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று நடந்தது. தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் (0), மனீஷ் பாண்டே (13) ஆகிய இருவரையும் தொடக்கத்திலேயே வீழ்த்தினார் தமிழ்நாடு ஸ்பின்னர் சாய் கிஷோர். கருண் நாயர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, எஸ்.ஆர்.ஷரத்தை 16 ரன்னில் சாய் கிஷோர் வீழ்த்தினார். அபாரமாக பந்துவீசிய சாய் கிஷோர் 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

87 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட கர்நாடகா அணிக்கு, அதன்பின்னர் அபினவ் மனோகர் மற்றும் பிரவீன் துபே ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் அடிக்க, ஜெகதீஷா சுஜித் டெத் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச 20 ஓவரில் கர்நாடகா அணி 151 ரன்கள் அடித்தது.

152 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த்தும், ஜெகதீசனும் நன்றாக தொடங்கினர். அதிரடியாக ஆடி 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்து நன்றாக தொடங்கிய ஹரி நிஷாந்த் 23 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேற, அவரைத்தொடர்ந்து சுதர்சன் வெறும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விஜய் சங்கர் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்த நிலையில், 16வது ஓவரில் விஜய் சங்கரை 18 ரன்னில் வீழ்த்திய காரியப்பா, அடுத்த பந்திலேயே ஜெகதீசனையும் 41 ரன்னில் வீழ்த்தி கர்நாடகா அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார்.

தமிழ்நாடு அணி முழுக்க முழுக்க ஷாருக்கானை மட்டுமே நம்பியிருக்க, 17வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து நம்பிக்கைக்கு உரமூட்டினார் ஷாருக்கான். கடைசி 3 ஓவரில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18வது ஓவரில் சஞ்சய் யாதவ் 5 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் தமிழ்நாடு அணிக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

19வது ஓவரில் எம் முகமது ஆட்டமிழந்தாலும், அந்த ஓவரில் ஷாருக்கான் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, முக்கியமான அந்த 19வது ஓவரில் தமிழ்நாடு அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து கடைசி ஓவரில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த சாய் கிஷோர், 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 3வது பந்து வைடு; அதற்கு வீசிய ரீபாலில் சிங்கிள் அடித்தார் ஷாருக்கான். 4வது பந்தில் சாய் கிஷோரும் சிங்கிள் எடுக்க, கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட, 5வது பந்தை வைடு; மீண்டும் வீசிய 5வது பந்தில் ஷாருக்கான் 2 ரன்கள் மட்டுமே அடிக்க, கடைசி பந்தில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார் ஷாருக்கான்.

இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.
 

click me!