இந்த ரூல் உனக்கும் பொருந்துமா கோலி..? சேவாக்கின் நெற்றியடி கேள்வி

By karthikeyan VFirst Published Mar 13, 2021, 7:48 PM IST
Highlights

இங்கிலந்துக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளில் ரோஹித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதையடுத்து, அதுகுறித்து லாஜிக்கை பிடித்து கேப்டன் விராட் கோலியை நறுக்குனு கேள்வி கேட்டுள்ளார் வீரேந்திர சேவாக்.
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி, இந்திய அணி தொடரை வெல்ல முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் ரோஹித் சர்மா. ரோஹித் செம ஃபார்மில் மிகச்சிறப்பாக ஆடிவரும் நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளில் ரோஹித்துக்கு ஓய்வளிப்பளிக்கப்படுவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஆடாத நிலையில், ராகுலுடன் தவான் தொடக்க வீரராக இறங்கினார்.  ராகுல்(1), தவான்(4), கோலி(0) ஆகியோர் சொதப்ப, இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே அடித்து படுதோல்வி அடைந்தது. முதல் டி20 போட்டிக்கு முந்தைய நாள் தான், ரோஹித் மற்றும் ராகுல் தான் முதன்மை தொடக்க ஜோடி என்று தெரிவித்த கோலி, திடீரென போட்டியன்று ரோஹித்துக்கு ஓய்வு என்று அறிவித்தார். 

ரோஹித்தை உட்காரவைத்துவிட்டு, இந்திய அணி வென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பி தோல்வியடைந்தது. இதையடுத்து ரோஹித்தை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதுகுறித்து கிரிக்பஸ்ஸில் நடந்த விவாதத்தில் பேசிய இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, எந்த பேட்ஸ்மேனும் ஓய்வெடுக்க விரும்பமாட்டார். நல்ல ரிதத்தில் இருக்கும்போதுதான் ஸ்கோர் செய்ய முடியும். அந்தவகையில், ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் ஆடத்தான் விரும்புவார். இங்கிலாந்து அணி நல்ல ஃபார்மில் இருந்த வீரர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்ததுதான் அந்த அணி தோற்க காரணமாக அமைந்தது. முக்கியமான வீரர்களுக்கு அந்த அணி ஓய்வளித்தது என்று ஜடேஜா கூறினார்.

அதன்பின்னர் இதுகுறித்து பேசிய சேவாக், ரோஹித் சர்மாவிற்கு 2 போட்டிகளில் ஓய்வு என்று கோலி தெரிவித்தார். இந்த ஓய்வு விதி கோலிக்கும் பொருந்துமா? ஒரு கேப்டன் எந்த காலத்திலும் எந்த சூழலிலும், நான் 2 போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லப்போவதில்லை. அப்படி ஒரு கேப்டன் சொல்லியதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை. கேப்டன் பிரேக் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், நன்றாக ஆடும் மற்ற வீரர்களுக்கு எதற்கு ஓய்வு? அப்படியே ஓய்வு எடுத்துக்கொள்வதாக இருந்தாலும், அது அந்த குறிப்பிட்ட வீரரின் முடிவாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பிரேக்காக இருக்கக்கூடாது என்று சேவாக் தெரிவித்தார்.
 

click me!