முதல் முச்சதம் அடித்த மும்பை வீரர்.. அருமையான பேட்டிங்

By karthikeyan VFirst Published Jan 22, 2020, 5:33 PM IST
Highlights

ரஞ்சி தொடரில் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார். 
 

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் நடந்துவருகிறது. இதில் மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய உத்தர பிரதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 625 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் இரட்டை சதமும் அக்‌ஷ்தீப் நாத் சதமும் அடித்தனர். உபேந்திரா 203 ரன்களையும் அக்‌ஷ்தீப் நாத் 115 ரன்களையும் குவித்தனர். இவர்களது அபாரமான பேட்டிங்கால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 625 ரன்களை குவித்தது.

Also Read - எங்ககிட்டயும் கோலியைவிட சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்காங்க!!ஆனால்... சிரிக்காம காமெடி பண்ண அப்துல் ரசாக்

625 ரன்கள் போதும் என்ற மனநிலையில், உத்தர பிரதேச அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய, மும்பை அணியோ தக்க பதிலடி கொடுத்தது. மும்பை அணியின் டாப் ஆர்டர்கள் சரியாக ஆடவில்லை. இதையடுத்து அந்த அணி 128 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் சர்ஃபராஸ் கானும் சித்தேஷ் லத்தும் இணைந்து அபாரமாக ஆடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 210 ரன்களை சேர்த்தனர். இருவரும் மிகச்சிறப்பாக ஆடினர். அருமையாக ஆடிய லத் 98 ரன்னில் ஆட்டமிழந்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இதையடுத்து சர்ஃபராஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆதித்ய தரேவும் அருமையாக ஆடினார். மந்தமாக பேட்டிங் ஆடி சதமடித்த சர்ஃபராஸ் அகமது இரட்டை சதமும் அடித்தார். மறுமுனையில் சர்ஃபராஸுடன் இணைந்து அதிரடியாக ஆடிய ஆதித்ய தரே சதத்தை நெருங்கினார். ஆனால் இவரும் சதமடிக்காமல் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் கடைசி செசனில் இரட்டை சதமடித்த சர்ஃபராஸ் கான், அதன்பின்னர் அதிரடியாக ஆடினார். இரட்டை சதமடிக்கும்போது அவரது ஸ்டிரைக் ரேட் 40ஐ கூட தொடவில்லை. ஆனால் இரட்டை சதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சர்ஃபராஸ் கான், முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார். சர்ஃபராஸ் கான் 301 ரன் அடித்திருந்த நிலையில், மும்பை அணியின் ஸ்கோர் 688 ரன்களாக இருந்தபோது போட்டி முடிந்தது. 391 பந்தில் 30 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 301 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ் கான். 
 

click me!