பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கும் முன்னாள் சுழல் ஜாம்பவான்..?

By karthikeyan VFirst Published Sep 30, 2021, 5:59 PM IST
Highlights

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 உலக கோப்பைக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழல் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரங்களில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினர்.

கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சியாளர்களாக இருந்துவந்த மிஸ்பாவும் வக்காரும், டி20 உலக கோப்பைக்கு முன்பாக திடீரென ராஜினாமா செய்து விலகினர். டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ரமீஸ் ராஜாவின் கீழ் செயல்பட விரும்பாத மிஸ்பாவும் வக்காரும் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினர்.

இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களாக முறையே மேத்யூ ஹைடன் மற்றும் வெர்னான் ஃபிலாண்டர் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழல் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் அணிக்காக 49 டெஸ்ட் மற்றும் 169 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 208 மற்றும் 288 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சக்லைன் முஷ்டாக். இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு. 2019ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர்  முஷ்டாக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!