அவரு வேலைக்கு ஆகமாட்டாரு.. அவர தூக்கிட்டு இவர சேருங்க.. ஜாம்பவனையே தூக்கிப்போட வலியுறுத்தும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Feb 24, 2020, 12:36 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்ய வேண்டுமென முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளை ஒயிட்வாஷ் செய்து 3 தொடர்களை வென்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் கோலோச்சுகிறது. தொடர் வெற்றிகளை பெற்றுவந்த இந்திய அணியின் வெற்றி பயணத்தை முடித்துவைத்துள்ளது நியூசிலாந்து அணி. 

அதிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சரியாக செயல்படவில்லை. பேட்டிங்கில் மயன்க் அகர்வால் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடினார். ரஹானே பரவாயில்லை. மற்றபடி நட்சத்திர வீரர்களான கோலி, புஜாரா ஆகியோர் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி ஆகியோரும் சோபிக்கவில்லை. 

பவுலிங்கிலும் இந்திய அணி பெரியளவில் சிறப்பாக செயல்படவில்லை. இஷாந்த் சர்மா மட்டுமே முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஷமி ஆகியோரின் பவுலிங் எடுபடவில்லை. அஷ்வினின் சுழலும் எடுபடவில்லை. பொதுவாக நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய அஷ்வின், இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் பேட்டிங்கிலும் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட்டான அஷ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் ஆடாததால் தான் படுதோல்வி அடைய நேர்ந்தது. எனவே இந்திய அணி அடுத்த போட்டியில், ஷுப்மன் கில்லை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் அறிவுறுத்தியுள்ளார். பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு, ஹனுமா விஹாரியை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ஷுப்மன் கில்லை ஆறாம் வரிசையில் இறக்கலாம் அல்லது ஷுப்மன் கில்லையே தொடக்க வீரராக இறக்கலாம் அல்லது விஹாரியை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை ஆறாவது வரிசையில் இறக்கலாம். எது எப்படியோ ஆனால் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்தார். 

வர்ணனையாளரான ஸ்டைரிஸின் கருத்துக்கு அடுத்து தனது கருத்தை தெரிவித்த சக வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர், அஷ்வினின் பேட்டிங் வர வர மோசமாகிக்கொண்டே வருகிறது. அவர் பேட்டிங்கில் சொதப்பிக்கொண்டே வருகிறார். அதேவேளையில் ஜடேஜாவின் பேட்டிங் நன்றாக மேம்பட்டிருக்கிறது. எனவே அஷ்வினை நீக்கிவிட்டு அடுத்த போட்டியில் ஜடேஜாவை அணியில் சேர்க்கலாம் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 

Also Read - அந்த பையன் ரொம்ப ஸ்பெஷலான வீரர்.. அவரை அணியில் சேர்ப்பதற்காக யாரை வேணா தூக்கலாம்.. முன்னாள் ஜாம்பவான் அதிரடி

ஒரு ஸ்பின்னர் மட்டுமே அணியில் ஆடுவதால், அவர் தரமான மற்றும் முதன்மையான ஸ்பின்னராக இருக்க வேண்டும் என்பதால் பவுலிங்கிற்கு முக்கியத்துவம் ஸ்பின் பவுலர் தேர்வு செய்யப்படுவதால், அஷ்வின் ஆடுகிறார். ஜடேஜாவும் நன்றாக வீசி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பின்னரே. எனவே பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த அணி நிர்வாகம் நினைத்தால், அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் கேப்டன் கோலி, ஒரு போட்டியில் தோற்றதற்காக அணியில் பெரியளவில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பமாட்டார் என்பதே உண்மை. அதேவேளையில், கண்டிஷன், அணியின் தேவை, காம்பினேஷன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மாற்றங்கள் செய்யப்படலாம். 
 

click me!