டி காக் அதிரடி அரைசதம்.. வார்னர் கடைசி வரை களத்தில் இருந்தும் நோ யூஸ்.. தென்னாப்பிரிக்கா சிறப்பான வெற்றி

By karthikeyan VFirst Published Feb 24, 2020, 10:39 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது தென்னாப்பிரிக்க அணி. 

இந்நிலையில், போர்ட் எலிசபெத்தில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நடந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. முதல் போட்டியில் ஆடிய ஜேஜே ஸ்மட்ஸ், ஸ்டெய்ன் மற்றும் ஃபெலுக்வாயோ ஆகிய மூவரையும் நீக்கிவிட்டு, ரீஸா ஹென்ரிக்ஸ், ப்ரிட்டோரியஸ் மற்றும் நோர்ட்ஜே ஆகிய மூவரையும் அணியில் சேர்த்தது. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரராக இறங்கிய அந்த அணியின் கேப்டன் குயிண்டன் டி காக், களமிறங்கும்போதே ஒரு முடிவுடன் தான் களமிறங்கியிருக்கிறார். ஏனெனில் தொடக்கம் முதலே அடித்து ஆடிய டி காக், அரைசதம் விளாசினார். மறுமுனையில் ரீஸா ஹென்ரிக்ஸ், டுப்ளெசிஸ் ஆகியோர் முறையே 14 மற்றும் 15 ரன்களில் வெளியேறினர். ஆனால் டி காக் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 47 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து ஆடம் ஸாம்பாவின் சுழற்பந்தில் வீழ்ந்தார். வாண்டெர் டசனும் அதிரடியாக ஆடி 26 பந்தில் 37 ரன்கள் அடித்தார். ஆனால் மில்லர் மந்தமாக ஆடியதால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் குறைந்தது. 14.5வது ஓவரில் குயிண்டன் டி காக் ஆட்டமிழக்கும்போது தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 121. ஆனால் அதன்பின்னர் எஞ்சிய 5 ஓவரில் வெறும் 37 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. அதுவும் வாண்டெர் டசன் ஓரளவிற்கு அதிரடியாக ஆடியதால் கிடைத்தது. இல்லையெனில் அதுவும் இல்லை. மில்லர் 13 பந்தில் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 158 ரன்கள் அடித்தது. 

159 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் ஃபின்ச்(14), ஸ்மித்(29), அலெக்ஸ் கேரி(14), மிட்செல் மார்ஷ்(6), மேத்யூ வேட்(1), அஷ்டன் அகர்(1) என விக்கெட்டுகள் சரிந்தன. இவர்கள் பந்துகளை வீணடித்ததுடன் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்ததால், மறுமுனையில்  வார்னர் களத்தில் இருந்தும்கூட, ஆஸ்திரேலிய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 

Also Read - போராட்டமே இல்லாமல் சரணடைந்த இந்தியா.. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி

வார்னர் 56 பந்தில் 67 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தும்கூட, 20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1-1 என தொடரை சமன் செய்தது. குயிண்டன் டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!