விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் டிராவிட் தான் காரணமா..?

By karthikeyan VFirst Published Jan 18, 2022, 3:45 PM IST
Highlights

விராட் கோலியால் ராகுல் டிராவிட்டுடன் இணக்கமாக செயல்படமுடியாததுதான், அவரது கேப்டன்சி விலகலுக்கு காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
 

ரவி சாஸ்திரிக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் விராட் கோலிக்கு நல்ல உறவு இல்லை. கும்ப்ளே - கோலி இடையே நல்ல புரிதல், இணக்கமான உறவு கிடையாது. ஆனால் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரியுடன் விராட் கோலி நன்றாக செட் ஆகிவிட்டார். 

சாஸ்திரி - கோலி இடையே நல்ல புரிதலும், நல்லுறவும் இருந்தது. அது களத்திலும் எதிரொலித்தது. சாஸ்திரி - கோலி காலக்கட்டத்தில் இந்திய அணி ஐசிசி டிராபியை வெல்லவில்லை என்றாலும், வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவித்தது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அத்துடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. ஒருநாள் மற்றும் டி20 அணிகள் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் ஆடமுடியாது என்பதை காரணமாக காட்டி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி தூக்கியெறியப்பட்டார்.

இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் விராட் கோலி நீடிப்பார் என்று நினைத்தால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் திடீரென டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி. 

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பின், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ராகுல் டிராவிட் பயிற்சியாளர் ஆனபின், அவரது பயிற்சியில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டுமே கேப்டன்சி செய்தார். அதிலும் 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டன்சி செய்தார் விராட் கோலி. 

இந்நிலையில், ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே குணாதிசயங்களின் அடிப்படையில் முற்றிலும் முரண்பட்டவர்கள். எனவே ராகுல் டிராவிட்டுடன் விராட் கோலியால் பொருந்தமுடியாது. அதனால் தான் அவர் கேப்டன்சியிலிருந்து விலகியிருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான் பட், ராகுல் டிராவிட் - விராட் கோலி இடையே சுத்தமாக செட் ஆகியிருக்காது. ராகுல் டிராவிட் அமைதியானவர்; கோலி ஆக்ரோஷமானவர். கோலியும் ரவி சாஸ்திரியும் ஒரே மாதிரியானவர்கள். அதனால் அவர்களுக்குள் செட் ஆகிவிட்டது. ஆனால் டிராவிட்டும் கோலியும் முற்றிலும் முரணானவர்கள் என்று சல்மான் பட் கூறியிருக்கிறார்.

எனவே, அதனால் தான் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியிருப்பார் என்று சல்மான் பட் கூறியிருக்கிறார்.
 

click me!