விராட் கோலியின் கேப்டன்சியில் தரமான சம்பவம் அதுதான்..! வாசிம் ஜாஃபர் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 17, 2022, 10:18 PM IST
Highlights

விராட் கோலியின் கேப்டன்சியில் மிகச்சிறந்த சம்பவம் எதுவென்று முன்னாள் டெஸ்ட் ஓபனர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். 

விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இங்கிலாந்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயித்ததில்லை என்ற விமர்சனம் இருந்தாலும், அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலகம் முழுதும் வெற்றிகளை குவித்தது. 

இந்திய அணியை நீண்டகாலத்திற்கு தொடர்ச்சியாக நம்பர் 1 இடத்தில் வைத்திருந்தார் கோலி. கோலியின் டெஸ்ட் கேப்டன்சியில் இந்திய அணி பல உச்சங்களை தொட்டிருந்தாலும், எது தரமான சம்பவம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர், விராட் கோலி ஒரு கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அணியை முன்னின்று வழிநடத்தி, பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அவர் பல சிறந்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். 3 விதமான போட்டிகளிலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் கோலி. அவர் ஐசிசி டிராபியை வென்றதில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், பல சிறந்த ரெக்கார்டுகளை ஒரு கேப்டனாக வைத்திருக்கிறார். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, ஒரு கேப்டனாக அவர் எந்த தொடரிலும் தோற்றதில்லை. இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோற்றிருக்கிறார். வெளிநாடுகளில் மிகச்சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

வெள்ளைப்பந்து அணியின் கேப்டனாக நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் டி20 தொடர்களை வென்றிருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி கேப்டன் என்ற சாதனையை படைத்தார். வேறு எந்த ஆசிய அணியும் ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தியதில்லை. அதுதான் விராட் கோலி கேப்டன்சியில் செய்யப்பட்ட தரமான சம்பவம் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
 

click me!