தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் மூலமாக சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் மூலமாக ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டு 2022 மற்றும் 2023 சீசன்களில் விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவர், 2022 சீசனில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 145 ரன்கள் எடுத்தார்.
இதே போன்று நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் உள்பட 362 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸ் உள்பட 96 ரன்கள் குவித்து 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி சிஎஸ்கே அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது.
இதே போன்று உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் லைகா கோவை கிங்ஸ் அணியில் இடம் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலமாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் கிடைத்துள்ளது.
இதில், அவர் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்தியா ஏ அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடுவதைப் பொறுத்து டி20 கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ராஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
இந்தியா ஏ அணி முதல் 4 நாட்கள் போட்டி:
சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன்*, தேவ்தத் படிக்கல், பிரதோஷ் ரஞ்சன் பால், சர்ஃபராஸ் கான், கேஎஸ் பரத் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல், ஷர்துல் தாக்கூர், புல்கித் நராங், சௌரப் குமார், மனவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வத் காவேரப்பா, துஷார் தேஷ்பாண்டே.
அபிமன்யூ ஈஸ்வரன் உடல் தகுதியைப் பொறுத்து அணியில் இடம் பெறுவார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்:
டிசம்பர் 17 – ஞாயிறு – முதல் ஒருநாள் கிரிக்கெட் – ஜோகன்னஸ்பர்க்
டிசமப்ர் 19 – செவ்வாய் – 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் – கியூபெர்ஹா
டிசம்பர் 21 – வியாழன் – 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் – பார்ல்