மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி தொடரின் அறிமுக போட்டியில் சதமடித்த நிலையில், தந்தை சச்சின் டெண்டுல்கர் பெருமை அடைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் ஆடி 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்தவர். கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் புகழுக்குரியவர் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் ரஞ்சி தொடரில் அவரது முதல் போட்டியில் சதமடித்து அசத்தியவர். 1988ம் ஆண்டு அவரது அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்திருந்தார். அதேபோலவே, அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி தொடரின் அறிமுக போட்டியில் சதமடித்து அசத்தினார்.
ரஞ்சி தொடரில் கோவா அணியில் ஆடுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். கடந்த 13ம் தேதி தொடங்கி ரஞ்சி தொடர் நடந்துவருகிறது. கோவா அணி முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கோவா அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 547 ரன்களை குவித்தது. கோவா வீரர் பிரபுதேசாய் 212 ரன்களை குவித்தார். அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார்.
தனது தந்தை சச்சின் டெண்டுல்கரை போலவே அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். அர்ஜுன் டெண்டுல்கர் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருந்து, தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி சதமடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலேயே அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருந்தது. அவையெல்லாம் தனது மனநிலையை பாதிக்கவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.
இந்நிலையில், அர்ஜுன் சதம் குறித்து பேசிய தந்தை சச்சின் டெண்டுல்கர், நான் இந்தியாவிற்காக ஆட ஆரம்பித்த காலக்கட்டத்தில், என் தந்தையை, சச்சினுடைய தந்தை என அறிமுகப்படுத்தினர். அதுகுறித்து என் தந்தையிடம் அவரது நண்பர் கேட்டபோது, இதுதான் என் வாழ்வல் பெருமையான தருணம் என்று கூறி என் தந்தை பெருமைப்பட்டார். தங்கள் குழந்தைகள் சாதிப்பதே எந்த தந்தைக்கும் பெருமை.
எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்
கிரிக்கெட்டரின் மகனாக பிறந்து கிரிக்கெட் கனவை துரத்துவது எளிதான காரியம் அல்ல. அதனால் தான், நான் ஓய்வுபெற்றபோது, என் மகன் அர்ஜுன் அவரது கிரிக்கெட் கனவை துரத்துவதற்கான வாய்ப்பை கொடுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். அவர் ஆட்டம் குறித்து பலவிதமான கருத்துகள் வரும். அதுவே அவருக்கு அழுத்தமாக இருக்கும். அதுமாதிரியான அழுத்தம் இருக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. ஏனெனில் எனக்கு என் பெற்றோரிடமிருந்து எந்த அழுத்தமும் வந்ததில்லை. எனக்கு நான் விரும்பியதை செய்ய முழு சுதந்திரம் கொடுத்தார்கள். உனக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று நான் அடிக்கடி அர்ஜுனிடம் சொல்வதுண்டு. இந்த உலகை உன்னால் மாற்றமுடியாது. உன் மனநிலையைத்தான் நீ மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன் என்றார் சச்சின் டெண்டுல்கர்.