விஜய் ஹசாரே தொடரின் ஃபைனலில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி, ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 248 ரன்கள் அடித்து, 249 ரன்கள் என்ற சவாலான இலக்கை சௌராஷ்டிரா அணிக்கு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. சௌராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி வீரர்களை வேகமாக ரன் அடிக்கவிடாமல் சௌராஷ்டிரா சீனியர் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் கட்டுப்படுத்தினார். தொடக்க வீரர் பவன் ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சத்யஜித் (27) மற்றும் அங்கித் (16) ஆகிய இருவரும் மந்தமாக பேட்டிங் ஆடி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மகாராஷ்டிரா அணி 25 ஓவரில் 80 ரன்கள் மட்டுமே அடித்தது.
PAK vs ENG: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிக ரன்களை குவித்து இங்கிலாந்து வரலாற்று சாதனை
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தனது பொறுப்பை உணர்ந்து நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இறுதிப்போட்டியிலும் சதமடித்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும், களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடி சதமடித்த ருதுராஜ், 131 பந்தில் 108 ரன்களை குவித்தார். அதன்பின்னர் அஸீம் காஸி 37 ரன்களும், நௌஷாத் ஷேக் 31 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் 248 ரன்கள் அடித்த மகாராஷ்டிரா அணி, 249 ரன்களை சௌராஷ்டிராவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
சௌராஷ்டிரா அணியின் சீனியர் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். சிராக் ஜானி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
விஜய் ஹசாரே டிராபியை வெல்ல சௌராஷ்டிரா அணிக்கு 249 ரன்கள் தேவை. இந்த தொடரில் அபாரமாக விளையாடி ஃபைனல் வரை வந்துள்ள சௌராஷ்டிரா அணி, இந்த இலக்கை விரட்டிவருகிறது. ஃபைனலில் இது சவாலான இலக்காக இருந்தாலும் கூட, இதை அடிக்கக்கூடிய பேட்டிங் ஆர்டர் சௌராஷ்டிராவிடம் உள்ளது.