
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து வென்று முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 477 ரன்கள் குவித்து 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில் ரோகித் சர்மா 103, சுப்மன் கில் 110, சர்ஃபராஸ் கான் 56 மற்றும் தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 84 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்தியா 64 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி கடந்த 112 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போட்டியில் தோற்று, எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரைப் பொறுத்த வரையில் கேஎல் ராகுல் முதல் போட்டியில் மட்டும் விளையாடினார். எஞ்சிய 4 போட்டிகளில் இடம் பெறவில்லை. விராட் கோலி, முகமது ஷமி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
மாறாக, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் என்று இளம் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார். மேலும், குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த தொடரில் 9 இன்னிங்ஸில் விளையாடிய ரோகித் சர்மா 2 சதம், ஒரு அரைசதம் உள்பட மொத்தமாக 400 ரன்களை குவித்துள்ளார். இந்த நிலையில் தான் வெற்றிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எப்போது எனது பேட்டிங் சிறப்பு வாய்ந்ததாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறதோ, அப்போதே நான் எனது ஓய்வை அறிவித்துவிடுவேன்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். மேலும், சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இப்போதைக்கு ரோகித் சர்மா ஓய்வு பெறும் முடிவில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், அவர் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.