
ஐபிஎல் போட்டிகள் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. இன்றைய இளம் வீரர்கள் ஐபிஎல் விளையாடினால் போதும் செட்டிலாகி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்பவும் கோடி கோடியாக ஐபிஎல் தொடர்களில் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட கூட ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு உதாரணமாக இஷான் கிஷான் சொல்லப்பட்டார்.
இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பிசிசிஐ ஊக்கத்தொகையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 64 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு பிசிசிஐ செயலாளர் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஜெய் ஷா அறிவித்த புதிய அறிவிப்பின் படி ஒரு சீசனில் 9 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்றால், 50 சதவிகித போட்டிக்கும் குறைவாக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது. அதாவது, 9 போட்டிகள் என்றால் 4 அல்லது அதற்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.
இதுவே, 50 சதவிகித டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக விளையாடும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதாவது, 9 டெஸ்ட் போட்டிகளில் 5 அல்லது 6 போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இது பிளேயிங் 11ல் இடம் பெறும் வீரர்களுக்கு மட்டும் தான். இதுவே டெஸ்ட் அணியில் இடம் பெற்று பிளேயிங் 11ல் இடம் பெறாத வீரர்களுக்கு ரூ.15 லட்சம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும்.
இதே போன்று 75 சதவிகித டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ஊதியமாக ரூ. 45 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இதுவே பிளேயிங் 11ல் இடம் பெறவில்லையென்றால் ரூ. 22.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இது 2022 – 23 சீசன்கள் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.